தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு சென்று மது வாங்கிவந்தனர்.
இதனால் கர்நாடக மது பாட்டில்களுக்கு தாளவாடியில் கிராக்கி ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி சிலர் கர்நாடகத்தில் குறைந்த விலைக்கு வாங்கி தாளவாடி ஜோரே ஓசூர்காரர் தோட்டத்தில் வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துவருவதாக தாளவாடி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கு 1 லட்சத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்பில், 45 பெட்டிகளில் தலா 48 பாட்டில்கள் வீதம் 2ஆயிரத்து160 பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தாளவாடியைச் சேர்ந்த சிவமல்லு, மினி வேன் ஓட்டுநர் மாதேஷ், மல்லன் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2ஆயிரத்து 160 மதுப்பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் ஆகியவற்றை தாளவாடி காவல் துறையினர் பறிமுதல் செய்து கோபி மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மதுவிலக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த தகுந்த இடைவெளி: குஷியாக மதுகடைக்கு சென்ற மது பிரியர்கள்!