ஈரோடு: முனிசிபல் காலனி கிருஷ்ணசாமி வீதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகன்களான கவுதம் (வயது 30), கார்த்தி (26) ஆகிய இருவரும் செக்கு எண்ணெய், மசாலா பொடிகள் போன்ற பொருட்களை வீட்டிலேயே விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கும், அவரது மாமாவான ஆறுமுகத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கவுதம், கார்த்தி ஆகியோருக்கும் ஆறுமுகசாமிக்கும் செல்போனில் பேசிக்கொள்ளும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்களது வீட்டுக்கு வந்து தகராறு செய்த ஆறுமுகசாமிக்கும் சகோதரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆவேசமடைந்த ஆறுமுகசாமி இருவரையும் கத்தியால் குத்தினார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுதம், கார்த்தி ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஒரு காரில் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், பலனளிக்காமல் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஆறுமுகசாமியை தேடி வருகிறார்கள்.
இதில் கார்த்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்பதும் நேற்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பிரதான கட்சிகளுக்கு சவாலாகுமா நாம் தமிழர் கட்சி?