ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் இருந்து 3 இஸ்லாமியர்கள், கடந்த மாதம் டெல்லி நிஜாமுதீன் மசூதியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்களை அண்மையில் கண்டுபிடித்து கரோனா தடுப்புக் குழுவினர், பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வசித்து வந்த இடத்திலிருத்து, 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மாரியம்மன் கோவில் வீதி, பெரியபள்ளி வாசல் வீதி, சின்னவெங்கடாசமல்பிள்ளி வீதி, பாக்கியலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் 1,800 வீடுகளில் சுகாதாரப் பணியாளர்கள் விசாரணை செய்வதோடு, கணக்கெடுப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது 3 பேரில் இருவருக்கு நோய் தொற்று இல்லை என்ற மருத்துவ அறிக்கை வந்த நிலையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் வட்டாட்சியர் கணேசன் தலைமையில் நகராட்சி, சுகாதாரப் பணியாளர்கள் 1,800 வீடுகளில் வசிக்கும் 4,500 பேர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான காய்கறி, மளிகைப் பொருள்கள் வீட்டிற்கே அனுப்பப்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: வெளியாட்கள் நுழைவதைத் தடுக்க முள்வேலி அமைத்த கிராமம்