ஈரோடு: மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். அவரது மனைவி லோகேஸ்வரி (28). இவர்களுக்கு விஷ்வாஷினி, திவிஸ் என்ற மகன், மகள் உள்ளனர்.
செங்கோட்டையனின் குடும்ப சொத்து கண்ணு உடையாம்பாளையம் என்னுமிடத்தில் 4 1/2 ஏக்கர் புஞ்சை நிலம் உள்ளது.
இதில் செங்கோட்டையன் என்பவருக்கும் உறவினரான கைலாஷ் என்பவருக்கும் சொந்தமாக 2 1/4 ஏக்கர் உள்ளது.
ஆனால் கைலாஷ் என்பவர் செங்கோட்டையனுக்கு சேர வேண்டிய சொத்தை கொடுக்காமல் கைலாஷின் மகள் சுபத்ரா, மருமகன் சம்பத் என்பவர்கள் செங்கோட்டையன் சொத்துக்களை முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
தனக்கு சேரவேண்டிய சொத்துக்களை பிரித்துக் கொடுக்க வேண்டி 17 ஆண்டுகளாக அரசு அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்களை கொடுத்தனர். ஆனாால் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.
தன்னுடைய மரணத்திலாவது தீர்வு கிடைக்கவேண்டும் என்று செங்கோட்டையனின் மனைவி லோகேஸ்வரி மன உளைச்சல் ஏற்பட்டு தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மயக்க நிலையில் கிடந்த லோகேஸ்வரியை பார்த்து மாமியார் தனது மகன் செங்கோட்டையனுக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக செங்கோட்டையன் சம்பவ இடத்திற்கு வந்து லோகேஸ்வரியை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
லோகேஸ்வரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இளம்பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.