ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஓவியா அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறையை முன்னிட்டு, வீட்டிலிருந்த பள்ளி மாணவி ஓவியா வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டை தண்ணீர் வைத்து துடைத்துவிட்டு, மின்விசிறியின் வேகத்தை அதிகப்படுத்த மின்விசிறி ரெகுலேட்டரை இயக்க முயன்றுள்ளார். அப்போது அதிலிருந்து எதிர்பாராத விதமாக மின்சாரம் ஓவியா மீது பாய்ந்த நிலையில், அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரைக் கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை செந்தில் குமார் கொடுத்தப் புகாரின் பேரில் ஈரோடு தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டை சுத்தம் செய்யும்போது, மின்சாரம் தாக்கி மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கையுடன் இருங்கள்: மழைக்காலங்களில் எளிதில் மின்சாரம் பாயக்கூடும் என்பதால், வீட்டில் பெற்றோர் முடிந்தவரையில் சிறுவர்களை இம்மாதிரியான வேலைகளை செய்ய வைக்கமால் இருப்பது அவசியம். அதேபோல, மழைக்காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இது போன்ற உயிரிழப்புகளை நாம் தவிர்க்க முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: குழந்தை மாயம் புகார்: டேட்டா வங்கியில் பெற்றோர், குழந்தையின் DNA சேகரிக்க - நீதிமன்றம் அதிரடி உத்தரவு..