ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு குறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் இன்று(செப்.11) வரை 99 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அதில் 580 போலிக்கணக்குகள் கண்டறியப்பட்டு அவற்றின் மூலம் 13 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரோடு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் சென்று பதிவு செய்த 1114 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
மேலும் போலியாக பதிவு செய்து கணக்குகளில் இருந்து இதுவரை 67 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்படவுள்ளது.
ஈரோட்டில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட 4 ஆயிரத்து 380 கணக்குகளில், 3 ஆயிரத்து 500 கணக்குகள் சரியாக உள்ளது.
ஒவ்வொரு பகுதிகள் வாரியாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. , விசாரணை முடிவில் போலியாக விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.