திண்டுக்கல்: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே பட்டதாரி இளைஞர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (24) என்ற இளைஞர் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் கரோனா பரவல் காரணமாக பணியை விட்டுவிட்டு, சொந்த ஊருக்கு வந்து, தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வந்தார்.
பணிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்த அருண் குமார், முழு நேரமாக ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக தெரிகிறது. தொடக்கத்தில் ஆன்லைன் ரம்மியிலிருந்து பணம் கிடைத்ததால், அதற்கு அடிமையாகி சுமார் ஓராண்டாக விளையாடி வந்துள்ளார். தனது சேமிப்பு மட்டுமல்லாமல், தாயும், பாட்டியும் கூலித்தொழில் செய்து கொண்டு வரும் பணத்தையும் வாங்கி ரம்மி விளையாடியுள்ளார். பெற்றோர் கண்டித்தும் கேட்காமல் ரம்மி விளையாடி வந்துள்ளார், அருண்குமார்.
இதனிடையே கடந்த ஒரு மாதத்தில் ஆன்லைன் ரம்மியில் சுமார் ஒரு லட்சம் ரூபாயை அவர் இழந்ததாகத் தெரிகிறது. பெரிய தொகையை இழந்ததால் அருண்குமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதுகுறித்து தாயாருக்கு தெரியவந்தால் வேதனைப்படுவார்கள் என்று நினைத்து அச்சமடைந்த அருண் குமார், கடந்த 22ஆம் தேதி ஊர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
இதை அறியாத அவரது தாயார் அருண் குமாரை பல்வேறு இடத்திலும் தேடியுள்ளனர். அப்போதும் கிடைக்காததால் இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளைஞரைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று(டிச.28) ஊர் கிணற்றில் அருண் குமாரின் சடலம் மிதப்பதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர், அவரது குடும்பத்துக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பட்டதாரி இளைஞரும், கூலித் தொழிலாளியின் மகனுமான அருண் குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், ஆன்லைன் ரம்மி குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் கிராமப்புறங்களுக்கும் பரவி விட்டதால், அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் யாரேனும் இறந்தால் ஆளுநர் தான் பொறுப்பு - ஜி.ராமகிருஷ்ணன்