திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள சிக்ராம்பட்டியில் வசித்து வருபவர் சுதா. இவர் தனியார் நிதி நிறுவனமொன்றில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். கரோனா பேரிடர் காரணத்தால் ஏற்பட்ட பொருளாதார சிக்கலின் காரணமாக கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து சுதாவின் வீட்டுக்கு தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இருவர், இருசக்கரவாகன ஆவணங்களின் நகலினை எடுத்துவருமாறு தெரிவித்துள்ளனர். அதன்படி இருசக்கர வாகன ஆவண நகலை எடுக்க சுதா வீட்டுக்குள் சென்றுள்ளார்.
மடக்கி பிடிக்கப்பட்ட இளைஞர்கள்
அப்போது ஆவணங்களை எடுத்து வருவதற்குள் இரு சக்கரவாகனத்தை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுதா, தனது உறவினர்களின் உதவியுடன் நிதி நிறுவன இளைஞர்களை மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர்.
எந்தவித தகவலும் தெரவிக்காமல் இருசக்கரவாகனத்தை எதற்காக திருடிச் சென்றீர்கள் என இளைஞர்களை நோக்கி சுதா சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார். தவணை தொகை கட்டாததன் காரணமாகவே வாகனத்தை பறிமுதல் செய்ததாக இளைஞர் தெரிவிக்க, நிதி நிறுவன அடையாள அட்டையை காண்பிக்குமாறு சுதா கூறியுள்ளார்.
அதற்கு நிதி நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்ததால் இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை என இளைஞர்கள் பதிலளித்துள்ளார்.
இளைஞரை வசைபாடிய பெண்
எந்தவித முன்னறிவிப்பின்றி, அடையாள அட்டை காண்பிக்காமல் எப்படி இருசக்கரவாகனத்தை எடுத்துச் செல்லலாம்? எனக் கேள்வியெழுப்பிய சுதா, பொது இடத்தில் இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசி வசை பாடியுள்ளார்.
தொடர்ந்து இளைஞரின் செல்போன், இருசக்கர வாகனத்தை பறித்த சுதாவின் உறவினர்கள், அவரை மிரட்டி தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது பொது இடத்தில் இளைஞரை தகாத வார்த்தைகளால் பேசிய பெண் தொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் பரவி காண்போரை முகம் சுளிக்கச் செய்துள்ளது.
இதையும் படிங்க: கத்தி முனையில் கொள்ளையடித்த எட்டு முகமூடி கொள்ளையர்கள் கைது