திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையில் கடந்த இரு மாதங்களாகத் தண்ணீர் விநியோகம் இன்றி மக்கள் தவித்துவருகின்றனர். இந்நிலையில், நேற்று 60 நாட்களுக்குப் பிறகு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. நெடுநாட்களுக்கு பிறகு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டதால் தண்ணீருக்காக மக்கள் விடுமுறை எடுத்திருந்தனர்.
இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘கடந்த இரண்டு மாதங்களாகத் தண்ணீரின்றி பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறோம். ஒரு குடம் குடிநீர் பத்து ரூபாய்க்கும், வீட்டில் புழங்கும் உப்புத் தண்ணீர் குடம் ஐந்து ரூபாய்க்கு வாங்குகிறோம். இதனால் மாதத்தில் 2,000 முதல் 3,000 வரை ரூபாய் தண்ணீருக்கு மட்டுமே செலவு செய்துவருகிறோம். மேலும், இங்குள்ள அனைத்து கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால் குப்பைத் தொட்டிகளாகப் பயன்படுகின்றது.
தற்போது வரும் தண்ணீரும் கூட அரை மணி நேரத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. இது எப்படி 60 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். இத்தண்ணீர் இரண்டு நாட்களில் தீர்நதுவிடும். அதனால் நாங்கள் விலைக்குத்தான் மறுபடியும் தண்ணீர் வாங்க வேண்டும் நிலை உள்ளது. எங்களது நிலையை உணர்ந்து அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல எங்கள் ஊர் வழி செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் எங்கள் ஊருக்குக் குடிநீர் வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனர்.