திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேங்காய், புளி, மாங்காய் உள்ளிட்ட பொருள்கள் அதிகம் விளையும். இங்குள்ள மக்களின் வாழ்வதாரமாக விவசாயம் மட்டுமே உள்ளது. நத்தம், கோபால்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்த வியாபாரம் நடக்கும் தேங்காய் மண்டிகள் இவ்விரு பகுதிகளிலும் செயல்பட்டு வருகின்றன.
இங்குள்ள வியாபாரிகள் நத்தம், மூங்கில்பட்டி, வத்திப்பட்டி, செந்துறை, புதுக்கோட்டை, ஊராளிபட்டி பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வியாபாரம் செய்கின்றனர். பெரும்பாலான வியாபாரிகள் வடமாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு அதிகளவில் தேங்காய் அனுப்புகின்றனர்.
ஆனால், நத்தம் பகுதியில் சில ஆண்டுகளாக போதிய மழையின்றி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு தேங்காய் விளைச்சல் அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனால், இங்கிருந்து வடமாநிலங்களுக்கு தேங்காய்களை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவினங்களை குறைப்பதற்காக வடமாநில வியாபாரிகள் ஆந்திராவிலிருந்து தேங்காய் கொள்முதல் செய்ய விரும்புகின்றனர்.
தீபாவளி, நவராத்திரி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை காலங்களில் நத்தத்தில் ஒரு தேங்காயின் விலை 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனையானது. பண்டிகை காலங்கள் முடிவடைந்ததையடுத்து, தேங்காயின் விலை சரிந்து ஆறு ரூபாயில் தொடங்கி ஏழு ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!