தமிழ்நாட்டில் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பல்வேறு இடங்களில் நெகிழிக் கப்புகள், நெகிழிப் பைகள், பாலித்தீன் பைகள் விற்பனை செய்வதாக நகராட்சிக்கு புகார் வந்தது.
அதனடிப்படையில் இன்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீரபாகு தலைமையில் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நெகிழிப் பொருட்கள் விற்பனை குறித்து சோதனை நடத்தப்பட்டது. இதில், நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்ய பயன்படுத்திய சைக்கிள், 150 கிலோ மதிப்புள்ள நெகிழிக் கப்புகள், பாலித்தீன் பைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதனையடுத்து நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலர்கள் கடைவீதிகளில் ஆய்வு செய்து, பாலித்தீன் பைகள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இதில், சுமார் ஒரு டன் நெகிழிப் பொருட்களை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.