கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பெருந்தொற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை வீட்டிலேயே இருக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, அப்பகுதியில் இயங்கி வரும் காமராஜர் காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதும் காரணத்தால், 6 இடங்களில் காய்கறிச் சந்தைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ளது. இருப்பினும் காமராஜர் காய்கறிச் சந்தையில் இருந்துதான், பிற மாவட்டங்களுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் அங்கு வழக்கம்போல் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.
மேலும், சிலர் வைரஸ் குறித்த அச்சமின்றி லாப நோக்கத்துடன் செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும் அங்கு வரும் வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என யாரும் முகக் கவசம் அணிவதோ, கிருமி நாசினி பயன்படுத்துவதோ கிடையாது என சமூக ஆர்வலர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
எனவே, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சம்மந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும், அலுவலர்களை தொடர்ந்து ஆய்வில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:டீ கடைகளுக்கு சீல்