திண்டுக்கல்: பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தப்பட்டுவருகின்றன. அதேபோல பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டன.
அந்த பேனருக்கு அருகிலேயே பெரியாரின் சிலையும் உள்ளதால் திராவிடர் கழகத்தினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் தங்களது கட்சி கொடிகள் மற்றும் பேனர்களை வைத்தனர். அப்போது பாஜகவினர் வைத்த பேனருக்கு மேல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை கட்டினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விசிகாவின் கொடியை அகற்றுமாறு அக்கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் கொடியை அகற்ற மறுத்த விசிகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் போலீசாரே கொடியை அகற்றினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதையும் படிங்க:பெரியார் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை