கேரளா மாநிலம் கொடைக்கானலை ஒட்டியுள்ளதால் இங்கு வசிக்கும் கிராமவாசிகள் கேரளாவிற்கு கூலி வேலைக்குச் சென்று அங்கு தங்கி வேலை பார்ப்பது வழக்கம். கரோனா அச்சுறுத்துல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூட அரசு உத்தவிட்டது. அதனையொட்டி கொடைக்கானலுக்கு வரக்கூடிய பிரதான சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதனால் கொடைக்கானல் பகுதியிலிருந்து கேரள மாநிலத்திற்கு பணி நிமித்தம் சென்று சொந்த ஊர்களுக்கு திரும்புவோர், பொது போக்குவரத்து, சாலைகள் முடக்கத்தால் அங்கிருந்து கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள வனப்பகுதி மற்றும் பட்டா காடுகளைப் பயன்படுத்தி நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
இது இங்குள்ள கிராமமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த மலைப்பாதை வழியாக கேரளாவில் இருந்து கொடைக்கானலுக்கு ஐந்து பேர் கால்நடையாக வந்துள்ளனர். இவர்களைப் பற்றிய தகவலை கிராம மக்கள் சுகாதாரத்துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் அவர்கள் அனைவரும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் இப்பாதையில் வருபவர்கள் மூலமாக கரோனா பரவும் ஆபத்து இருக்கிறது என்று கிராம மக்களிடையே பெரும் அச்சமேற்பட்டுள்ளது. இனி இவ்வழியை பயன்படுத்தி மக்கள் வருவதை தடுப்பதற்கு உடனடியாக இந்த மலைப்பாதையை வனத்துறையினர் அடைத்திட வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.