திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காய்கறி சந்தையாகும். சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சந்தைக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட கனரக மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. மாவட்டம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கக் கூடிய பொருட்களை இங்கு வந்து நேரடியாக கமிஷன் கடைகளில் விற்பனை செய்வர்.
கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு இங்கிருந்துதான் காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் இந்த காய்கறி சந்தையை நம்பிதான் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் சந்தையில் வரி, சுங்கவரி, கடை வாடகை என வருடத்திற்கு நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ. 2 கோடி செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாக இருக்கும் இந்த சந்தையில் சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லை.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட் சங்க செயலாளர் ராசியப்பன் கூறுகையில், ’கடந்த 50 நாட்களாக தேங்கி கிடக்கும் குப்பை, அழுகிப்போன காய்கறிகளால் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால், சந்தையை சுற்றி கிடக்கும் குப்பைகளை அகற்றவும், கழிப்பறை அமைக்கவும் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றார்.