திண்டுக்கல்: வடமதுரை அருகேவுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர், உமாபதி. இவர் தற்போது கோவையில் உள்ள செக்யூரிட்டி ஏஜென்சி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் வடமதுரையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். அவரது பாஸ்புக் மற்றும் ஏடிஎம் கார்டு தொலைந்து போனதாக கூறப்படுகிறது.
எனவே, புதிய ஏடிஎம் கார்டு மட்டும் வங்கி பாஸ்புக் பெறுவதற்கு, வங்கியில் கடந்த மாதம் பணம் கட்டியுள்ளார். ஒரு மாதம் ஆன நிலையில் ஏடிஎம் கார்டு மற்றும் பாஸ்புக் கிடைக்கவில்லை. இதனால், நேற்று (நவ.15) கோவையில் இருந்து வடமதுரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வந்த உமாபதி, அங்கு டெப்ட்டேஷன் பணியில் இருந்த மேலாளரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது வங்கியின் மேலாளர், ‘உங்கள் வேலை பொறுமையாகத் தான் நடக்கும். காத்திருக்க முடிந்தால் காத்திருங்கள்; இல்லை என்றால் போய்விட்டு அடுத்த வாரம் வாருங்கள்’ எனக் கூறியுள்ளார். அப்போது, உமாபதி தான் கோவையில் வேலை செய்வதாகவும், இதற்காகவே விடுமுறை எடுத்து வங்கிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் ஊருக்குச்செல்ல வேண்டும் எனவும்; எனவே ஏடிஎம் கார்டு மற்றும் பாஸ்புக்கை தாருங்கள் எனவும் கேட்டுள்ளார்.
அதற்கு மேலாளர், ‘நீங்கள் கூகுள் பே, போன் பே மூலம் எல்லா பணத்தையும் எடுத்துவிட்டீர்கள், உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்று தெரியுமா?’ என்று கேட்டுள்ளார். அதற்கு உமாபதி, ‘சார் வங்கி கணக்கு மூலமாக அதிகமான டிரான்செக்ஸன் செய்து உள்ளேன்’ என்று கூறியுள்ளார். அதற்கு மேலாளர், ‘என்ன ட்ரான்செக்ஸன், பெரிய வெங்** ட்ரான்ஸ்செக்சன், உங்கள் கணக்கில் ஒரு பைசா மட்டுமே உள்ளது. அதை வைத்து எப்படி பேங்க் நடத்த முடியும். மினிமம் பேலன்ஸ் 500 ரூபாய் வைக்க முடியாத உங்களுக்கெல்லாம் எதற்கு ஏடிஎம் கார்டு?’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், ‘காசே இல்லாத அக்கவுண்டிற்கு ஏடிஎம் கார்டு என்ன அவசரம்? காலையிலிருந்து சொல்வது புரியவில்லையா, எத்தனை முறை சொல்வது. உட்கார்ந்திருந்து வாங்கிச்செல்லுங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள்’ என அலட்சியமாகப் பேசியுள்ளார். இதனை, உமாபதி தனது செல்போனில் படம் பிடித்து அந்தப்பகுதியில் உள்ள சமூக ஊடகங்களில் பதிவிட்டார். உமாபதியிடம் வங்கி மேலாளர் பேசும் வீடியோ காட்சிகள் தற்போது அந்தப் பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாக வெளிநாட்டு கரன்ஸி பறிமுதல் - இப்படி ஒரு காரணமா?