திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ஆவிளிபட்டி என்னும் கிராமம் உள்ளது. இவ்வூரில் வசித்துருபவர் ஆண்டிச்சாமி. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ராசு என்பவருக்கும் நில பிரச்னையில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் ராசுவின் மகன் கிருஷ்ணன் என்பவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் கல்வி பயின்றுவருகிறார். கிருஷ்ணனும் அவருடைய நண்பனான செல்வமுருகன் என்பவரும் சேர்ந்து சேர் சாட் என்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஆண்டிச்சாமி தொலைபேசி எண்ணை பாலியல் தொழிலாளி என பதிவிட்டுள்ளனர்.
இதனால் கடந்த 40 நாட்களாக செல்போன் மூலம் இரவு பகலாக ஆண்டிச்சாமிக்கு எண்ணற்ற அழைப்புகள் வந்துள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான ஆண்டிச்சாமி சாணார்பட்டி காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காவல் துறையினர், கிருஷ்ணன் அவருடைய நண்பனான செல்வமுருகன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில் இளைஞர்கள் இருவரும் வெவ்வேறு ஐடிகளை பயன்படுத்தி பெண்கள் போல பேசி ஆண்டிச்சாமியின் கைப்பேசி எண்ணை கொடுத்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் இது போன்ற செயலில் ஈடுபட்டு கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.