தக்காளி சாகுபடி என்றாலே நஷ்டமான விவசாயம் என்று விவசாயிகள் மத்தியில் கூறப்படுகிறது. ஏனென்றால் மழை காலங்களில் பழங்கள் செடிகள் அழுகும், குறைவான அறுவடையே செய்யப்படும். இந்த பழங்களை அதிக விலை விற்றாலும் லாபம் இருக்காது. அதற்கு நேர்மாறாக கோடை காலங்களில் அதிக அறுவடை செய்தாலும் கிலோ ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்படும். அதிகபட்ச விற்பனைக்கு பிறகு மார்க்கெட்டுகளில் தக்காளி வாங்க ஆள் இல்லாத சூழல் ஏற்படும். இதனால் டன் கணக்கில் தங்காளிகள் கீழே கொட்டப்பட வேண்டியிருக்கும். திண்டுக்கல் மாவட்டத்திலும் இதே நிலைதான்.
திண்டுக்கல் அய்யலூர், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இந்த பழங்கள் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் சந்தைகளுக்கும், வெளி மாவட்டங்கள், கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக நிலக்கோட்டை மிளகாய்பட்டி பகுதியில் மட்டும் 50 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் அறுவடை முடிந்து விற்பனை செய்யப்படும்போது போதிய விலை கிடைக்காததால், டன் கணக்கில் உபரியாகும் பழங்கள் குப்பைகளிலும், சாலைகளிலும், தெருவோரங்களிலும் கொட்டப்படுகின்றன. இதுபோன்ற அவல நிலையை தடுக்க ஒட்டுமொத்த விவசாயிகளும் கோரிக்கையாக வைப்பது.
கோடைக்காலங்களில் தக்காளி பழங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து கொள்ள வேண்டும். அதனை தக்காளி ஜாம், தக்காளி சாஸ், தக்காளி உலர்ந்த தூள் போன்று மாற்ற மதிப்பு கூட்ட ஆலை அமைக்க வேண்டும் என்பதுதான். அரசு சார்பில் இதுபோன்ற ஆலை அமைந்தால், விவசாயிகளுக்கு போதிய ஆதார விலை கிடைக்கும்.
இதற்கு அடுத்தபடியாக விவசாயிகளின் கோரிக்கையாக இருப்பது, தக்காளி சாகுபடிக்கும் ஆதார விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதுதான். இதன்மூலம் விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் குறைந்த பட்ச விலையாகப் பெற்று விவசாயத்தையும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும் என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய சூழலில் அறுவடை செய்யக் கூடிய தக்காளி பழங்கள் சந்தையில் 14 கிலோ அடங்கிய ஒரு பெட்டி 10 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. அதன்படி ஒரு கிலோவில் விலை ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் மட்டுமே. இந்த விலை மார்க்கெட்டிற்கு தோட்டத்திலிருந்து கொண்டு செல்வதற்கான வாகனத்தின் எரிபொருள் கூட கட்டுபடி ஆகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் கூலி ஆட்களுக்குச் சம்பளம், உரம் உள்ளிட்ட செலவுகளை எப்படி சமாளிக்க முடியும் என்பது விவசாயிகளின் நியாயமான கோரிக்கையாக உள்ளது.