திண்டுக்கல்: 'மலைகளின் இளவரசியாக' திகழும் கொடைக்கானலுக்கு இன்று(மே 26) 177ஆவது பிறந்த தினம். ஆங்கிலேயர்களால் 1845ஆம் ஆண்டு முதன்முதலில் கொடிகள் அடர்ந்த சோலை காடுகளுக்கு நடுவில் ஓய்வு இல்லம் உருவாக்கப்பட்டது. அவர்களால் முதல் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்டு நகர்ப்பகுதியாக தொடங்கப்பட்ட நாளாக மே 26ஆம் தேதி கல்வெட்டுக்களில் உள்ளது.
விண்ணை முட்டும் மலைகளும் மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலை முகடுகளுக்கும் நடுவே இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கொண்டது, கொடைக்கானல். கடும் வெப்பத்திலிருந்து தவிக்கவும்; இயற்கையை ரசிக்கவும் ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள், வெளிநாடுகள் உட்படப் பலரும் வந்துசெல்வது வழக்கம்.
முக்கிய சுற்றுலாத் தலங்களாக விளங்கக்கூடிய நட்சத்திர ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா, குணா குகை, தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மட்டுமல்லாது இன்னும் பல பொக்கிஷங்களையும் அடக்கி வைத்துள்ளது, கொடைக்கானல் மலை. மக்கள் அறிந்திடாத அதிசய இடங்களும் பல லட்சம் தாவரங்களும் இங்கு அடங்கியிருக்கிறது.
வணிக நோக்கில் கொடைக்கானல் நகரம் வளர்ச்சி அடைந்து வந்தாலும்; இங்கு இருக்கக்கூடிய இயற்கையையும் குளுமையும் காப்பாற்ற வேண்டும் என்பதே இங்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
'மலைகளின் இளவரசி' கொடைக்கானலைக் காப்பாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கொடைக்கானல் நகரத்தைத் தவிர, கொடைக்கானலில் சுற்றியுள்ள மலைக்கிராமங்கள் உருவாகி பல நூற்றாண்டுகளைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கியவரின் 200ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்!