திண்டுக்கல்: தன்னுடைய திருமண அழைப்பிதழில் நாட்டு நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் புகைப்படத்தை அச்சிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டு நாய் ஆர்வலர் பொம்மையா.
தற்போதைய இளம் தலைமுறையினர் வித்தியாசமான முறையில் தங்களை உலகிற்கு அடையாளப்படுத்துவதில் கவனமாக செயல்படுகின்றனர். அதிலும் குறிப்பாக திருமணம் உள்ளிட்ட விஷேச காரியங்களில் பொதுமக்களை ஈர்க்கும் வண்ணம் அல்லது விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நாட்டு நாய் ஆர்வலர்
அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம் வி.எஸ்.கோட்டை கிராமம், ஜக்கமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த நாட்டு நாய் ஆர்வலர் பொம்மையா தன்னுடைய திருமண அழைப்பிதழில் தான் வளர்க்கும் சிப்பிப்பாறை நாயின் புகைப்படத்தை முதல் பக்கத்திலும், கடைசிப் பக்கத்திலும் அச்சிட்டு வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வித்தியாசமான விழிப்புணர்வு
இது குறித்து பொம்மையாவிடம் கேட்டபோது, "நம்முடைய நாட்டு நாய் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், அது குறித்த ஆர்வத்தை பொது மக்களிடம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்திலும், என்னுடைய திருமண அழைப்பிதழில் நான் வளர்க்கின்ற கன்னி, சிப்பிப்பாறை நாயின் படத்தை அச்சடித்துள்ளேன். இது என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலமாக நாட்டு நாய் இனங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உருவாகும் என நான் நம்புகிறேன்" என்றார்.
இதற்காகவே சங்கம் !
மணமகன் பொம்மையா சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டு நாய் இனங்களை வளர்த்து வருகிறார். இதற்காகவே தனது நண்பர்களுடன் இணைந்து 'கன்னி நாய் பிரியர்கள் சங்கம்' என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலமாக நாட்டு நாய்களின் முக்கியத்துவத்தை பரப்புரை செய்து வருகிறார்.
இதையும் படிங்க: கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்ற இன்பநிதி - வழி அனுப்பி வைத்த ஸ்டாலின்