கொடைக்கானலில் புலியின் நகம், பற்களை விற்பனை செய்த இருவர் கைது - kodaikanal news
திண்டுக்கல்: கொடைக்கானலில் புலியின் பற்கள், நகங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் புலியின் பல், நகங்களை சிலர் விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின்பேரில் கொடைக்கானல் வனச்சரக மாவட்ட வன அலுவலர் திலீப், வனசரகர் செந்தில் குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
அப்போது, அண்ணாசாலையில் பூண்டு வியாபாரம் செய்து வரும் பெரியகுளத்தைச் சேர்ந்த தாமோதரன் (47), அப்சர்வேட்டரியைச் சேர்ந்த வேல்முருகன் (37) ஆகியோர் புலிப்பல், நகங்களை விற்பனை செய்வது தெரியவந்தது. தொடர்ந்து, இருவரிடமும் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலி நகம், பற்களைக் கொண்டுவந்து கொடைக்கானலில் ரகசியமாக விற்பனை செய்வது உறுதியானது.

அவர்களிடமிருந்து நான்கு புலி நகங்கள், பற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு புலி பற்கள், நகங்கள் எங்கிருந்து கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'ஐபோன் 10 ஆயிரம்' - போலிகளை ஓஎல்எக்ஸில் கூவிக் கூவி விற்று நபர் கைது!