திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோவை, தேனி, போடி, கம்பம், காரைக்குடி போன்ற ஊர்களுக்குச் செல்வதற்காக ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பல மாவட்டங்களில் இருந்து கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்குப் பயணிகள் கோடை விடுமுறையையொட்டி சமீப காலங்களாக அதிகமாக வருகின்றனர்.
இதனால், அங்கு பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பயணிக்க 24 மணி நேரமும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே உள்ளது. இதனிடையே நேற்று (ஜூன் 8) இரவு அடையாளம் தெரியாத 3 நபர்கள் பேருந்து நிலையத்தில் பயணிகளை கத்தியைக் காட்டி, மிரட்டி அலப்பறையில் ஈடுபட்டனர். இவர்களின் இந்த செயலினால், அங்கிருந்த பயணிகள் பயத்தினால் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெகு நேரமாக இந்த 3 நபர்களும் கையில் கத்திகளை வைத்துக்கொண்டு செய்த அட்டகாசங்களுக்கு அளவில்லாமல் போகவே அப்பகுதியில் இருந்த சில பயணிகள், போதை ஆசாமிகள் கையில் வைத்திருந்த கத்தியை லாவகமாகப் பிடுங்கினர். கத்தியைப் பிடுங்கியதைத்தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் வெகுநேரமாக உதார் விட்டுக்கொண்டிருந்த போதை ஆசாமிகளுக்கு தர்ம அடி கொடுத்து, ஓர் இடத்தில் அமர வைத்து, மீண்டும் அடித்து துவைத்தனர்.
இதுகுறித்து புறநகர் பகுதி காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு வந்த காவல்துறையினர் தர்ம அடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அந்த போதை மாணவர்களை மீட்டு காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கொண்டு சென்றனர்.
மதுபோதையில் கத்தியைக்காட்டி பொதுமக்களையும் பயணிகளையும் அச்சுறுத்திய ஆசாமிகள், யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்? ஏதேனும் குற்ற வழக்குகள் ஏற்கெனவே உள்ளனவா? என்பன குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை..