திண்டுக்கல்: நத்தம் அருகே வேம்பரளி சுங்கச்சாவடி அருகே பிரபு, சின்னத்தம்பி, சக்திவேல் ஆகியோரது வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்குள் நேற்றிரவு புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்த வீடுகளிலுள்ள செல்போன்களைத் திருடிவிட்டு சின்னத்தம்பி என்பவரது இருசக்கர வாகனத்துடன் தப்பிச் சென்றனர். அப்போது விழித்துக் கொண்ட பிரபுவும், சக்திவேலும் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் சேர்ந்து திருடர்களை விரட்டினர்.
திருடர்களைப் பிடிக்க சின்னத்தம்பி, பிரபு ஆகியோர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளனர். ஆனால் திருடர்கள் அவர்களைப் பிடித்துவிடக் கூடாது என்பதற்காகத் திருடுவதற்கு முன்பாகவே பைக்கின் ஸ்பார்க் பிளக்கை கழற்றிவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் அவர்கள் எடுத்துச் சென்ற இருசக்கர வாகனம் சுங்கச்சாவடி அருகே அநாதையாக நின்றுள்ளது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுங்கச்சாவடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகள், மறைவான பகுதிகளில் ஒளிந்திருந்து இருசக்கர வாகனத்தைக் கொள்ளையர்கள் எடுக்க வந்தபோது விரட்டிச் சென்றனர். இதில் ஒருவர் பிடிபட இதைக் கண்ட மற்றவர்கள் ஓடிவிடவே பிடிபட்ட நபரைப் பிடித்து பொதுமக்கள் விசாரித்தனர்.
இதில் பிடிபட்ட நபர் மதுரை மாவட்டம் பூசாரிபட்டி, பட்டணத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற வினோத் (25) என்றும், தன்னுடன் திருட்டில் ஈடுபட்ட பட்டணத்தைச் சேர்ந்த அருள்முருகன், ஆனைமலை ஒத்தக்கடையைச் சேர்ந்த ரூபன் என்றும் கூறியுள்ளார். இதேபோல் பல்வேறு இடங்களில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து திருடன் பிடிபட்ட தகவல் அருகிலுள்ள பகுதிகளில் பரவியதையடுத்து காசம்பட்டியில் வெள்ளத்துரை என்பவரது வீட்டில் எல்இடி டிவியையும், ராமன் என்பவரது வீட்டில் ஐந்தாயிரம் பணமும், சாமிராஜ் வீட்டில் செல்போனும் திருடுபோனது தெரியவரவே அவர்களும் வேம்பரளி பகுதிக்கு வந்துள்ளனர்.
இதனால், அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டுள்ளது. பின்னர், பிடிபட்டவரை நத்தம் காவல் துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ஜோலார்பேட்டையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு