திண்டுக்கல்லை அடுத்துள்ள மாலைபட்டி சக்தி நகரில் வசித்துவருபவர் நாராயணமூர்த்தி. இவர் மருந்து விற்பனையாளராக பணிபுரிந்துவருகிறார்.
இந்நிலையில், ஏப்ரல் 20ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற இவர், இன்று (ஏப்.24) அதிகாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.8,500 கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து நாராயணமூர்த்தி காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கைரேகைகளை எடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.