திண்டுக்கல் : வேடசந்தூர் அடுத்த தொட்டணம்பட்டி என்னும் பகுதியில் இருந்து D.கூடலூர் வரை இரண்டு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிகிறது. இந்த பணிக்காக சாலையோரங்களில் உள்ள புளிய மரங்களை ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புளியமரத்தை அகற்றும்போது பாதுகாப்புக்குபோதிய ஆள்களை சாலையில் நிறுத்தாமலும், போக்குவரத்தை முறையாக சீர் செய்யாமலும் அஜாக்கிரதையாக மரங்களை சாய்த்து வருவதால் பல விபத்துக்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.
இதற்கிடையில், நேற்று(பிப்.5) புளியம்பட்டி என்னும் இடத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாதுகாப்புக்கு ஆள்களை நிறுத்தாமலும் சாலையில் முன்னெச்சரிக்கை தடுப்புகள் வைக்காமலும் ஜே.சி.பி எந்திரம் மூலம் புளியமரத்தை சாய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையை சேர்ந்த மச்சக்காளை என்பவரும், அவருடன் ஜான்பாஸ்கர் என்பவரும் வந்துகொண்டிருந்தனர்.
இதில், எதிர்பாராதவிதமாக புளியமரம் சாய்ந்து அவர்களின் மீது விழுந்தது. இதில் இருவரும் மரத்தின் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் லேசான காயங்கள் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையடுத்து, இதுபோன்று அஜாக்கிரதையாக வேலை பார்க்கும் ஒப்பந்ததாரர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது இருவர் மீதும் புளியமரம் விழும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காணொலி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : புதுக்கோட்டை அருகே முன்விரோதத்தினால் ஒருவர் அடித்து கொலை