திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரிலிருந்து செம்பட்டி, சின்னாளப்பட்டி வழியாக 9F என்ற அரசுப்பேருந்து திண்டுக்கல்லுக்குச் சென்று கொண்டிருந்தது. பேருந்து சின்னாளப்பட்டி அருகே வந்துகொண்டிருந்தபோது பள்ளி மாணவர்கள், படிக்கட்டில் நின்றுகொண்டு பயணித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி, கல்லால் மாணவர்களை அடித்ததாக, காயமடைந்த மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஓட்டுநர் கனகராஜ் கல்லால் அடித்ததில், சின்னாளப்பட்டி தனியார்ப் பள்ளியில் படிக்கும் பழைய செம்பொடியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் முத்துராஜா என்பவருக்கு, தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக்கண்ட சக மாணவர்கள் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த சின்னாளப்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் பரமேஸ்வரன் தலைமையிலான காவலர்கள், மாணவர்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து ஓட்டுநர் கனகராஜிடம் கேட்டதற்கு, மாணவனை படியில் நிற்காதீர்கள் என்று உள்ளே போகச் சொல்லி தள்ளியதில், மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.