திண்டுக்கல்: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துமனையில் நேற்று (ஜூலை 19) அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளனர். 1990-96 காலகட்டத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித் துறை அமைச்சராக இருந்தவர் மதுசூதனன்.
சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்திய காலகட்டத்தில் அவருக்கு ஆதரவளித்த முக்கியத் தலைவர்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் மதுசூதனன் இறந்துவிட்டதாக, கொடைக்கானலில் அதிமுகவினர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனால் கொடைக்கானல் சுற்றுவட்டார அதிமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மதுசூதனன் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், இறந்ததாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை சமூக வலைதளங்களில் பரப்பிய செயல், அதிமுக வட்டாரங்களுக்குள்ளேயே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா சந்திப்பு? - அப்போலோ மருத்துவமனையில் பரபரப்பு