கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதில் மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பேருந்து போக்குவரத்து மக்களின் தேவைக்காக இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மண்டல பொதுச் செயலாளர் கணேசன் ஆகியோர் இணைந்து பேருந்துகளில் பின்பற்றப்படும் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பதையும், பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுவதையும் போக்குவரத்துக் கழக செயலாளர் உறுதி செய்தார்.
மேலும், அரசு சார்பில் அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுவதால் 60 சதவிகிதம் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும், பயணத்தின்போது பொது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முகக்கவசம் அணியாமல் பேருந்துக்கு காத்திருந்த மக்களுக்கு இலவச முகக்கவசங்களும், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
தொடர்ந்து, ”கரோனா பெருந்தொற்று பரவல் இருப்பதால் பேருந்து நிலையங்களில் கூட்டமாக குழுமி நிற்கக்கூடாது. பொதுமக்கள் எந்த இடமனாலும் கண்டிப்பாக தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் அரசுக்கும் போக்குவரத்துக் கழகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து சமூகம் குறித்த பொறுப்புடன் வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரையில் தொடங்கிய தனியார் பேருந்துகள் இயக்கம்