திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவரது மனைவி பசுங்கிளி. இவர்களது மகன் பாண்டித்துரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்த விபத்தில் இறந்துவிட்டார். இந்த நிலையில், அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ, மகன் மோனேஷ் குமரன் ஆகியோரது காதணி விழா நேற்று(மார்ச் 13) ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
இந்த காதணி விழா தனது சகோதரர் பாண்டித்துரையின் முன்னிலையில் நடக்க வேண்டும் என்று பிரியதர்ஷினி விரும்பினார். அதனடிப்படையில், பாண்டித்துரையை போலவே சிலிக்கான் சிலை உருவாக்கப்பட்டு விழாவில் வைக்கப்பட்டது. அப்போது, பாண்டித்துரையின் சிலை வைக்கப்பட்ட சாரட் வண்டியில், தாய்மாமன் செய்முறைகள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டன.
இதையடுத்து சிலையின் மடியில் இரண்டு குழந்தைகளுக்கும் காது குத்தப்பட்டது. இதனைக் கண்ட உறவினர்கள் நெகிழ்ந்து கண்கலங்கினர். இதுகுறித்து பாண்டித்துரையின் தாய் பசுங்கிளி கூறும்போது, “அக்காவின் குழந்தைகளுக்கு தன்னுடைய மடியில் வைத்து காது குத்த வேண்டும் என்பது பாண்டித்துரையின் நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேறாமலே விபத்தில் உயிரிழந்தார்.
அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பெங்களூருவில பாண்டித்துரையின் தத்ரூப சிலை செய்யப்பட்டு, விழாவில் வைக்கப்பட்டது. இப்போது என்னுடைய மகனின் ஆசை நிறைவேறியது. பேரக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்தும் வாய்ப்பு கிடைத்தது. என் மகளும் மகிழ்ச்சியாக உள்ளாள்” என்றார். இந்த சிலை செய்வதற்கான விலை 5 லட்சம் ரூபாய். இந்த சம்பவம் ஒட்டன்சத்திரம் மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வன உயிரின நலவாரியக் குழுவை விரைந்து அமைத்திடுக - முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்