திண்டுக்கல் : பழனியில் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமராஜ் இன்று (ஆக 3) ஆய்வு மேற்கொண்டார். பழனி பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் கலந்துகொண்டு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வை தாய்மார்களிடம் விளக்கினார்.
குழந்தைகள் பாதுகாப்பு - திண்டுக்கல் சிறப்பு
விழாவில் பேசிய அவர், "குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் திண்டுக்கல் மாவட்டம் சிறந்து விளங்குகிறது. அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுப் பொருள்கள் சரியாக வீடு தேடி கொடுக்கப்படுகிறதா, பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இவற்றில் ஏதேனும் குறைகள் இருந்தால் குழந்தைகள் நல ஆணையத்திற்கு பெற்றோர் தகவல் தெரிவிக்கலாம்" என்று கூறினார். மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும், குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் இல்லாத தமிழ் நாட்டை உருவாக்குவதே மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் லட்சியமாகும்" என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, பழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை - ஓபிஎஸ்க்கு அமைச்சர் பதில்