திண்டுக்கல்: பத்துக்கு பத்து அடி கொண்ட அறையானது தகரத்தால் உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் சுமார் 15க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இவர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் உணவு கொடுக்கப்பட்டு வந்தது. அதிலும், தமிழ்நாடு அரசின் நியாய விலைக் கடைகளில் கொடுக்கப்படும் அரிசி மூட்டை இரண்டு டன்னுக்கும் மேலாக இருந்தது.
மேலும், கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் இருக்கும் பகுதிக்கு, வெறும் 10 கழிவறைகள் மட்டுமே இருக்கின்றன. இப்படியான அனைத்து தரமற்ற வசதிகளோடு வடமாநிலத் தொழிலாளர்களை வேலை வாங்கும் தொழிற்சாலை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா வடமதுரை அருகே, திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான இரண்டு நூற்பாலைகளில்தான் இந்த கொடூரம் நிகழ்ந்து வந்துள்ளது.
மனிதாபிமானமற்ற செயல்: கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையின் இந்த அவல நிலையை அறிந்த சுகாதார அலுவலர்கள், திடீர் சோதனையை நடத்தியபோது தான் இவை அனைத்தும் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திடீர் சோதனையின் மூலம், தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த அவலநிலை குறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “மனிதாபிமானமற்ற முறையில் ஐந்து பேர் வசிக்க வேண்டிய அறையில், 15க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். குறிப்பாக நான்கு பக்கவாட்டுகளும் மேல் பகுதியும் தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளதால், வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையான வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாகி நோய்வாய்ப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவுகள் சமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை ஆகியவை சுகாதாரமற்ற முறையில் உள்ளது. பணியாளர்களைத் தங்க வைப்பதற்கு அரசிடம் முறையாக அனுமதி வாங்காமல் சட்டத்திற்கு புறம்பாக தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநிலத்தொழிலாளர்களை சிறையில் இருப்பது போல் அடைத்து வைத்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும்: கரோனா வைரஸ் தொற்று முதல் கட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமலேயே, சுமார் 50க்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே, நூற்பாலை உடனடியாக அரசிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.
இங்கு பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்குவதற்கு இடவசதி, உணவு, கழிப்பறை போன்ற அனைத்து வசதியும் செய்து தர வேண்டும். மேலும், கரோனா வைரஸ் தொற்று தடுப்பூசியை பணியாளர்களுக்கு முறையாகச் செலுத்த வேண்டும்.
தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் அங்கு முறையான வசதி செய்து தராதது தொடர்பாக மாவட்டத் தொழிலாளர் நலத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிறுமியின் செயினை பறித்து வாயில் பதுக்கிய பெண்.. சமத்தாக பிடித்துக் கொடுத்த சிறுமி..