கரோனா வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வரும் காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறவும், முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்ட சுப நிகழ்வுகள் நடத்தவும், புதிதாக நிகழ்ச்சிகள் நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் எம்.வி.எம் நகரைச் சேர்ந்த அன்புச்செல்வனுக்கும், என்.எஸ். நகரைச் சேர்ந்த செவிலியராக பணிந்து வரும் சௌமியா ராணிக்கும் இன்று எளிமையான முறையில் மணமகன் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமணத்தில் மணமக்களின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் உறவினர் உள்பட பத்து பேர் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் கிருமிநாசினி மூலம் கைகளைக் கழுவிய பின்னரே வீட்டிற்குள் வந்தனர். மணமக்கள் உட்பட திருமணத்தில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டனர்.
அதுமட்டுமின்றி திருமணத்தின்போது அனைவரும் சமூக விலகலைப் பின்பற்றி இடைவெளியுடன் தனித்து நின்றனர். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஆடம்பரங்கள் எதுவுமின்றி எளிமையான முறையில் திருமணங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் பார்க்க: மருத்துவமனைக்கு முகக்கவசம் அணியாமல் சென்ற அமெரிக்க துணை அதிபர்!