திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பாச்சலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்பவரது மகள் பிரித்திகா ஐந்தாம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய சகோதரி தர்ஷினி மதிய உணவு வேளையின்போது அவரைக் காணவில்லை எனத் தேடிவந்துள்ளார். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் மாணவியை பள்ளி நிர்வாகம் தேடியுள்ளனர். இந்நிலையில், பள்ளியின் சமையலறை அருகில் மாணவி உடல் கருகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், உடனே மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மாணவி செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் கூறி அவரது உறவினர்கள் பாச்சலூர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் சம்பவயிடத்திற்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
![பள்ளி மாணவி உடல் கருகிய நிலையில் மீட்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dgl-01-kodaikanal-student-death-vs-spt-tn10030_15122021220158_1512f_1639585918_641.jpg)
மாணவி எரித்துக் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : திருமண நாளன்று தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்