வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துவருகிறது. இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, வேலூர், சிவகங்கை மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு அம்மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு முதலே பரவலாக மழை பெய்துவருகிறது. ஆனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடும் மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் கொடைக்கானல் பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக விடுமுறை அறிவித்தது. இதனால் திண்டுக்கல் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து மழையின் தீவிரத்தை அறிந்து ஒன்பது மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி அறிவித்தார். இதனால் பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் திரும்பிச் செல்ல இயலாமல் மழையில் மாட்டிக்கொண்டு தவித்தனர்.
இதுகுறித்து பெற்றோர் ஒருவர் கூறுகையில், ‘மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக இருந்தால் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். வழக்கம்போல் பிள்ளைகள் பள்ளிக்கு வந்தபின்னரே விடுமுறை அறிவித்தால் இந்த மலையில் எப்படி அவர்கள் விடு திரும்பிச் செல்ல இயலும். தொலைவான பகுதிகளிலிருந்து வரும் மாணவ-மாணவிகள் பேருந்து நிலையத்தில் நிற்கக்கூட முடியாமல் மழையில் நனைந்தபடி பேருந்திற்காகக் காத்திருந்தனர். இனியாவது மாவட்ட நிர்வாகம் பிள்ளைகளின் நிலையைச் சிந்தித்துச் செயல்பட வேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: கனமழை காரணமாக இன்று 8 மாவட்டங்களுக்கு விடுமுறை!