திண்டுக்கல், பேகம்பூரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கொடைக்கானல் பெரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர். இவர் கூலி வேலை செய்து வருகிறார் . இவரது மகள் வர்ஷா (14) இதே விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு வர்ஷா விடுதியில், தூங்கும் அறையில் தன்னை ஏதோ ஒரு பூச்சி கடித்து விட்டதாக அறையில் தன்னுடன் தங்கியுள்ள மாணவிகளிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் மாணவி வாயிலிருந்து நுரை தள்ளவே பள்ளி நிர்வாகத்தினர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விடுதியின் அறையில் மறைந்திருந்த 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை அடித்து அப்புறப்படுத்தினர். பின்னர், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.