திண்டுக்கல்: நத்தம் அருகே சமுத்திராபட்டியில் பூலாமலை பூஞ்சுனை கருப்பு கோயில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இக்கோயிலுக்கு கிராம மக்கள் சார்பில் காளை மாடு வளர்க்கப்பட்டுவந்தது.
சமுத்திராபட்டி கிராம மக்கள் காளையை மூத்த பிள்ளையாக நினைத்து வளர்த்துவந்தனர். பூலாமலை பூஞ்சுனை கருப்பு கோயில் மாடு பாலமேடு, சிராவயல், கொசவபட்டி உள்ளிட்ட புகழ்பெற்ற பல ஜல்லிக்கட்டுக்கு சென்று பல பரிசுகளை பெற்று ஊருக்கும் கோயிலுக்கும் பெருமை சேர்த்த இந்தக் காளைமாட்டை கட்டிப்போடுவதில்லை.
வீடு வீடாகச் சென்று கிராம மக்கள் தரும் பழம், வைக்கோல் போன்றவற்றை சாப்பிடுவது வழக்கம். மாடு வயலில் மேய்ந்தாலும் இந்த மாட்டை விரட்டி அடிக்கமாட்டார்கள். யாரையும் மாடு குத்தாது. அவ்வாறு கிராம மக்களுடன் பாசமாக பழகி வந்த மாடு உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தது.
மாடு இறந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். தங்களது வீட்டில் துயர சம்பவம் நடந்ததாக கருதுகிறார்கள். இறந்த காளைமாட்டின் உடல் அலங்கரிக்கப்பட்டு நாடக மேடையில் கோயில் முன்பு வைக்கப்பட்டது. சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.
பின்னர் கோயில் காளை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோயிலுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டது.