சிவகங்கையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான நந்தினி தனது தந்தை ஆனந்தனுடன் சேர்ந்து மதுக்கடைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இவர் மதுவை எதிர்த்து பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டும் இருக்கிறார். ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை முற்றுகையிட முயன்று கைதாகினார்.
அதன்பின், கடந்த 2014ஆம் ஆண்டு டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார். இதற்காக அவர் மீது திருப்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் மூலம் போதை பொருட்களை விற்பது குற்றம் இல்லையா என நந்தினி கேள்வி எழுப்பி வாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நீதிபதிகளை எதிர்த்து வாதாடியாதால் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நேற்று அவர்களை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அவர்களுக்கு ஜூலை 9ஆம் தேதி வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், கைது செய்யப்பட்ட நந்தினிக்கு வரும் ஜூலை 5ஆம் தேதி திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து பலரும் நந்தினிக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சமூகவலைதளங்களில் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், அடுத்த வாரத்தில் நந்தினிக்கு திருமணம் நடக்கவிருப்பதால், அவரை விடுதலை செய்யக்கோரி நெட்டிசன்கள் ரிலீஸ் நந்தினி என்ற ஹேஷ்டாக்கை டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இது இந்திய அளவில் இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு அளவில் முதலிடத்திலும் உள்ளது.