திண்டுக்கல்: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வருகின்ற 10ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் வெளிவர உள்ளது. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், வசந்த் ரவி, தமன்னா, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் ‘காவாலா, ஹுகும்' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், சில நாட்களுக்கு முன் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது தொடர்பாகப் பல்வேறு மாவட்டங்களில் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதுகிறது. தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் 'ஜெயிலர்' படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வி தன்னார்வலரை அவமதித்த ஆங்கில ஆசிரியர் - உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பண்டிகை அல்லாத நாட்களில் திரையரங்குகளில் காலை சிறப்பு காட்சிகள் திரையிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா, உமா திரையரங்கில் டிக்கெட் தொடர்பான ஆன்லைன் பதிவு குறித்து திரையரங்க மேலாளர் மாயாண்டியிடம் ரசிகர்கள் விசாரித்ததாக கூறப்படுகிறது.
இதில் நந்தவனப் பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், நெட்டு தெரு ஜோசப் ஆகிய இருவரும் திரையரங்கு மேலாளர் மாயாண்டியிடம் கூடுதலாக டிக்கெட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் திரையரங்க மேலாளர் மாயாண்டியின் காதில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திரையரங்கு மேலாளர் மாயாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வத்தலக்குண்டு அருகே அரசு பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு: அதிரடியாக மீட்ட பொதுமக்கள்!