திண்டுக்கல்: நிலக்கோட்டை பேரூராட்சிக்குட்பட்ட மணியக்காரன்பட்டி சாலையோரம் உள்ள சுதந்திரபாண்டி என்பவர் தோட்டத்துப்பகுதியில் கட்டிவைக்கபட்ட ஆடு, மாடுகளை இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் திருட வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரை மடக்கிப்பிடிக்க முயன்ற விவசாயிகளை தாக்கி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அப்போது, இருதரப்புக்கும் ஏற்பட்ட கைகலப்பில் கார் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களை அச்சுறுத்தி, இளைஞர் தப்பியோட முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, அந்த இளைஞரை சுற்றிவளைத்து பிடித்த பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், பொதுமக்களிடமிருந்து இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முகமது பைசல் என்பது தெரியவந்தது.
அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், நிலக்கோட்டை பகுதியில் இதேபோல கடந்த ஒரு மாதமாகப் பல்வேறு இடங்களில் ஆடு, மாடு, கோழிகள் மற்றும் விவசாய மோட்டார் பம்புகள் மற்றும் அதன் உபகரணங்கள் பல திருடு போவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை எனவும்; மாவட்ட காவல் துறையினர் தலையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இணையத்தொடர் என்ற பேரில் ஆபாசப் படம் எடுத்த கும்பல் - ஒருவர் கைது!