திண்டுக்கல்: பழனி அடுத்த ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யாப் பழங்கள் ஆயக்குடி கொய்யா சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆயக்குடியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் கொய்யாப்பழம் தினந்தோறும் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் கேரளா, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆயக்குடியில் இருந்து கொய்யாப்பழம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் சந்தையில் 20 கிலோ அடங்கிய கொய்யாப்பழம் பெட்டி 1200 ரூபாய் முதல் 1600 ரூபாய் வரை விலை போனது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிக அளவில் விவசாயிகள் கொய்யாப்பழங்களை கொண்டு வந்தனர்.
இதன் காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்து 20 கிலோ அடங்கிய கொய்யாப்பழம் பெட்டி 120 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையில் மட்டுமே விலைபோனது. தற்போது விலை சரிந்து விற்பனையாவதால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிப்பதற்கான கூலிக்கு கூட விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். அரசு இதுபோன்ற காலங்களில் விவசாயிகள் கொய்யாப்பழங்களை பாதுகாத்து வைத்திருக்கும் வகையில் குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கோயம்பேடு மார்க்கெட் காய்கறிகளின் விலை நிலவரம்!