திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சுமார் 15 கிமீ தொலைவில் பூம்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான குழந்தை வேலப்பர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலானது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோயில் விழாவின் தொடக்கமாக கடந்த ஜனவரி 30ஆம் தேதி திருக்கொடியேற்று விழா நடைபெற்றது. இந்தக் கொடியேற்றத்தையடுத்து ஜனவரி 31ஆம் தேதி அன்ன வாகனத்திலும், பிப்ரவரி ஒன்றாம் தேதி மயில் வாகனத்திலும், 2ஆம் தேதி காளை வாகனத்திலும், 3ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 4ஆம் தேதி பூத வாகனத்திலும், 5ஆம் தேதி சிங்க வாகனத்திலும், 6ஆம் தேதி யானை வாகனத்திலும் முருகப்பெருமான் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இவ்விழாவின் எட்டாம் நாளான நேற்று (பிப். 7) தேரோட்ட விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், சாலைகளில் உருண்டும் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:அய்யா வைகுண்ட தர்மபதி திருவிழா கோலாகலம்