திண்டுக்கல் பகுதிகளில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் வினோத் தலைமையிலான காவல் துறையினர் சிறுமலை, தவசிமடை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தவசிமடை கிராம நிர்வாக அலுவலர் திருவருட்செல்வம், தவசிமடை கருந்தண்ணி நீரோடை அருகே 14 நாட்டுத் துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து சாணார்பட்டிக்கு விரைந்த காவல் துறையினர், 14 நாட்டுத் துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து சாணார்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சாணார்பட்டி அருகே நொச்சி ஓடைப்பட்டியில் நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்த பரதன் என்பவரை காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.
இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான சின்ன மலையூர், பெரியமலையூர், கரந்தமலை, மன்னவனூர், கூக்கால், பூண்டி, தாண்டிக்குடி, கே.சி.பட்டி, பாச்சலூர் ஆகிய கிராமங்களில் சிலர் அனுமதியின்றி கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருப்பதாக தகவல்கள் வருவதால் காவல் துறையினரின் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.
மேலும் கள்ளத் துப்பாக்கிகள் வைத்திருக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க:நாட்டுத் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்த 4 பேர் கைது!