திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது குடிபோதையில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில் தனக்கும் கோழிக் குஞ்சுகள் வழங்க வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அங்கு பணியிலிருந்த கால்நடை ஆய்வாளர் பழனியம்மாள் அந்த நபரின் பெயர் இல்லை என்று கூறியுள்ளார். ஆத்திரமடைந்த அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஆய்வாளரின் செல்போனை உடைத்துள்ளார். மேலும், அருகில் கிடந்த கல்லை எடுத்து தாக்கியதில் அதே ஊரைச் சேர்ந்த பவுன்ராஜ் என்பவர் காயமடைந்துள்ளார்.
மேலும் தனது கூட்டாளிகளை அழைத்து வந்த அவர், அரிவாளுடன் அலப்பறையில் ஈடுபட்டுள்ளார். பின் கால்நடை மருத்துவமனையில் இருந்த சன்னல்களை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினரைக் கண்டதும் அந்த இளைஞர் ஓட்டம் பிடித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கால்நடை ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நத்தம் காவல் துறையினர் அதே ஊரைச் சேர்ந்த அர்ஜூனையும், 17 வயது சிறுவனையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய இளைஞரையும் அவரது நண்பர்களையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவர்களுக்கு சக மருத்துவர் விஜய பாஸ்கர் எழுதிய பாராட்டு மடல்!