திண்டுக்கல்: காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நேற்று சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு அரசியல் அறிவியல் துறை சார்பில் தமிழ்நாடு சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதில் வேலு நாச்சியார், மருதுபாண்டி சகோதரர்கள், ராணி மங்கம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன் உட்பட 40 சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்களும், அவர்கள் தொடர்பான ஒலி ஒளியும் இடம்பெற்றிந்தது. இந்த கண்காட்சியை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் முருகன், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, துணைவேந்தர் கூடுதல் ( பொறுப்பு) குர்மீத்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கிராமப்புறம் வளர்ந்தால் தான் இந்தியா வளரும். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. தாய் மொழியில் பயின்றால் தான் அறிவை வளர்க்க முடியும். தாய் மொழி கல்வி தான் அதிக பலன் தரும்.
சோழ மன்னர்கள் ஆட்சியின் போது பொறியியல் படிப்பு கிடையாது. பயிலாமல் பல கட்டடங்கள், கோயில்களை உருவாக்கினர். இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் இருந்த ஆளுமை, சிறந்த படைப்பு திறன் தான். தமிழ் அமுத மொழி, இனிய மொழி. பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தமிழ் மொழிக்காக பனாரஸ் பல்கலைகழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்ப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா காலத்தில் பொருளாதாரம், சைக்காலஜி, சமூகம் என அனைத்து பிரச்சனைகளும் இருந்தது. தற்போது இந்தியா உலகில் சிறந்த பொருளாதார நாடாக திகழ்கிறது. இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகிறது. பல மொழிகளில் வணக்கம் என்பதற்கு வேறு வேறு வார்த்தைகள் உள்ளது. ஆனால் இரண்டு கைகளை இணைத்து கும்பிட்டால் வணக்கம் என்பது அனைத்து மொழிகளிலும் புரியும். இது தான் இந்தியா என பேசினார்.
அதன்பின் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன், சுதந்திரப் போராட்டத்தில் தென் தமிழ்நாட்டை தவிர்த்து விட்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுத முடியாது சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது நமது தமிழ்நாடு தான், குறிப்பாக திருநெல்வேலி பகுதி தான். மகாகவி பாரதியாருடைய வழியில் நமது பிரதமர் செயல்பட்டு வருகிறார். பெண்களின் சக்தி நாட்டின் சக்தி பெண்களின் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
2047 ஆம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் பொழுது நம்முடைய நாடு வளர்ச்சி அடைந்த நாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரத பிரதமர் செயல்பட்டு வருகிறார் என பேசினார்.
இதையும் படிங்க: 56 இஞ்ச் மோடி ஜீ சாப்பாடு - 40 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.8.5 லட்சம் பரிசு