திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளது. இதனால் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொடைக்கானல் முக்கியப் பகுதிகளான அண்ணா சாலை, முஞ்சிக்கல், கலையரங்கம் பகுதி, நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காய்கறிக் கடைகள், பலசரக்கு கடைகள் ஆகியவற்றில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனர்.
அனைத்துக் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பியதால், பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் மக்கள் பொருள்கள் வாங்க கூடியதால் கரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு அறிவிப்பிற்கு அர்த்தம் இல்லாமல் போகிறது.