உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று பரவாமல் இருக்க மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்கவேண்டும் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால் திண்டுக்கல் பகுதியின் பல இடங்களில் மக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் உள்ளதால் கரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா, தமிழ்நாடு மெர்கண்டைல், ஆக்சிஸ், ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் செயல்பட்டுவருகின்றன. மாதத்தின் முதல் வாரம் என்பதால் இங்குள்ள வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் சம்பளம், ஓய்வூதியம் எடுத்திட மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.
இதற்காக வங்கிகளின் முன்பாக சமூக விலகலை பின்பாற்றாமல் கூட்டமாகவும், நெருக்கமாகவும் மக்கள் நிற்கின்றனர். இதுபோல மருந்தகங்கள், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் போன்ற இடங்களில் முகக் கவசங்கள் ஏதுமின்றி மக்கள் நெரிசல்களுக்கு இடையே பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்தில் 45 பேர் கரோனாவினால் பாதிப்படைந்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி பலரும் சகஜ நிலையில் சாலைகளில் நடந்தும், வாகனங்களிலும் செல்கின்றனர். இதனால் திண்டுக்கல் பகுதியில் கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதன் தீவிரத்தை உணராமல் சகஜ நிலையில் இருப்பது பலரையும் அச்சமடைய செய்கிறது.
இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி