திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கையை செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கென கோயில் நிர்வாகம் சார்பில் சரவணப் பொய்கை, சண்முக நதி, ஒருங்கிணைந்த முடிமண்டபம், மின் இழுவை ரயில் முடிமண்டபம், தண்டபாணி நிலையம் உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை செலுத்துவதற்கென இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இங்கு 330 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் உரிமம் அடிப்படையில் வேலை செய்து வருவதால், இவர்களுக்கு நிரந்தரமான மாத ஊதியம் என்பது கிடையாது. இவர்களுக்கு தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு ஒரு பணியாளருக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் காணிக்கை செலுத்தும் இலவச டிக்கெட்டுகளில், 30 ரூபாய் பங்கு விகிதம் மாதம்தோறும் சீட்டுகள் எண்ணிக்கை அடிப்படையில் பிரித்து இவர்களுக்கு பங்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பக்தர்களிடம் முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் பெறக்கூடாது என கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பெற்றதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், உதவியாளர் லட்சுமி இருவரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து கடந்த 15 நாட்களுக்கு பின்னர், இரு தொழிலாளர்களும் உதவி ஆணையர் லட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு பணியில் சேர்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போது, தங்களது மனைவிகளை அழைத்து வந்தால் மட்டுமே பணி தருவேன் என்று கூறியுள்ளார். இதனையடுத்து கோயில் பணியாளர் தமிழ்செல்வன் மற்றும் குமரேசன் உதவி ஆணையரைச் சந்திக்க அவர்களது மனைவிகளை அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில், உதவி ஆணையர் அவர்களை தகாத வார்த்தைகளில் பேசி அவமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஊழியர்கள் மற்றும் அவர்களது மனைவி கண்ணீருடன் வெளியே வந்துள்ளனர்.
இதனையடுத்து, உதவி ஆணையரின் செயலைக் கண்டிக்கும் வகையில், முடி காணிக்கை செலுத்தும் தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக கண்டன பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டு கொண்டே நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த இரண்டு தொழிலாளிகளுக்கு ஆதரவாக உடன் பணியாற்றும் 10 தொழிலாளர்கள் கண்டன பேட்ஜ் அணிந்து பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து கண்டன பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மேலும் ஊழியர்கள் இன்று(செப்.22) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பக்தர்கள் மொட்டை அடிக்க முடியாமல் அவதியடைந்தனர். இந்த நிலையில் ஜோதி என்பவர், நான் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்றும் அரசுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டேன் என்றும் கூறி மொட்டை அடித்துக் கொண்டே மற்ற ஊழியர்களை அநாகரிக வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும், ஜோதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இருவர் தரப்பினரிடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இந்த நிலையில், பழனி கோயில் முடி காணிக்கை நிலையத்தில் பக்தர்களைக் கட்டாயப்படுத்தி பணம் வசூல் செய்ததற்காக பணியிட நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளர்களுக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: காவிரி விவகாரம்: உருவ பொம்மை எரித்து போராட்டம்.. மாநில எல்லையில் பரபரப்பு!