திண்டுக்கல்: பழனி கோவிலில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின் பொழுது, திருக்கோவில் அதிகாரிகளுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகப் பேச வந்த திமுக கவுன்சிலர்களுக்கும் இடையேயான மோதலாக மாறியது. இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் பழனி கோவில் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்தநிலையில் கோவில் நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோவில் உதவி ஆணையர் லட்சுமி அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதைக் கோவில் உதவி ஆணையர் லட்சுமி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. உதவி ஆணையர் மீது அடிவாரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோவில் அலுவலகத்திற்கு வெளியே நின்று இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அத்துமீறி கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கோவில் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைந்தவர்களைத் திருக்கோவில் சார்பாக உள்ள ஒளிப்பதிவாளர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் படம் எடுத்தனர். அப்போது ஆவேசமடைந்த திமுகவினர் வீடியோ எடுக்கக் கூடாது என கூறி தேவஸ்தான ஒளிப்பதிவாளர் சந்தோஷ் என்பவரை தாக்கி அவரது கையிலிருந்த கேமராவையும் பிடுங்கினர். இதையடுத்து அங்கு தள்ளுமுள்ளு மற்றும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் கூட்டத்தைக் கலைத்தனர். பழனி கோவில் அலுவலகத்தில் நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அரிய வகை விலங்குகளும் 1 கிலோ தங்கமும்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?