பழனி : ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயிலில் சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கரோனா நோய் பரவல் குறைந்து வந்த நிலையில், 20 நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. தற்போது கரோனோ பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஆடி கிருத்திகைக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதாலும், ஆடி பதினெட்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதாலும் 2, 3ஆம் தேதிகளில் பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏராளமான பக்தர்கள் கோயில் முன் நின்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.
இதையும் படிங்க :ஆடி கிருத்திகை: நெக்குருகி உனைப் பணிய கல் நெஞ்சன் எனக்கருள்வாய் முருகா...