கடந்த 2019ஆம் ஆண்டு, திண்டுக்கல் நாடளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேலுசாமி போட்டியிட்டு 5,38,972 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி வெற்றார். முன்னதாக, தேர்தல் பரப்புரையின்போது பல்வேறு வாக்குறுதிகளை அவர் அளித்திருந்தார்.
ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கொடைக்கானலுக்கு நன்றி தெரிவிப்பதற்காகக் கூட மக்களைச் சந்திக்க வரவில்லை என உள்ளூர்வாசிகள் குமுறுகின்றனர்.
மேலும், கரோனா காலகட்டத்தில் கொடைக்கானலைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை எனவும்; பெயர் அளவிற்கு ஒரு முறை அரசு மருத்துவமனையை வந்து பார்வையிட்டு சில நிமிடங்களில் சென்றுவிட்டார் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, திமுக எம்.பி. வேலுச்சாமியைக் காணவில்லை எனவும்; அவரை கண்டுபிடித்துத் தருவோருக்கு சிறப்பு சன்மானம் வழங்கப்படும் எனவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவிட்டு வருகின்றனர். அவருக்கு எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது.